நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன், இன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் திருப்பூண்டி காரைநகர் அருகே காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு இருசக்கர வாகனம் குறுக்கில் வந்தது. இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் காரை லாபகமாக வளைத்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பக்க பகுதி சேதமடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறு காயங்களோடு தற்போது அவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அன்பழகன் என்பவரும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நலமாக உள்ளதாகவும், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கீழ்வேலூரில் அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.