Rock Fort Times
Online News

மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கினார்களா?; வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு…!

திருச்சி திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயார் செய்வதற்கு பல தனியார் தொழிற்சாலை கொண்ட சிட்கோ (தொழிற்பேட்டை) துவாக்குடியில் உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு மின்விநியோகம் கொடுப்பது, டிரான்ஸ்பார்மர் அமைப்பது போன்ற பல்வேறு பணிகளுக்காக தொழிற்சாலை உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும்போது, மின்வாரிய அதிகாரிகள் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தனியார் தொழிற்சாலையின் உரிமையாளர் ஒருவரும், துவாக்குடி மின்வாரிய அதிகாரி ஒருவரும் உரையாடிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மின்வாரிய அதிகாரி, தொழிற்சாலை உரிமையாளரிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று அதனை மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டதாகவும், மின் நுகர்வோர் மற்ற அதிகாரிகளை பார்க்க அனுமதிக்காமல் தானே பணம் பட்டுவாடா விவரங்களை கையாண்டு வருகிறார் என்றும் பேசப்பட்டு உள்ளது. மேலும், ஒருவரிடம் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றபோது அதில் 20 ஆயிரம் மட்டுமே வாங்கியதாகவும், அதனை 5 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாகவும் பேசியுள்ளனர். இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்