திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு வந்ததாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து நவம்பர் மாதம் டாக்டரிடம் ரூ.20 லட்சம் வாங்கியதோடு, கடந்த 1-ந்தேதி மீண்டும் ரூ.20 லட்சம் வாங்கிய போது அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே மதுரையில் அங்கித் திவாரியின் வீடு, அலுவலகத்தில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. எனவே, அரசு டாக்டரிடம் லஞ்சம் வாங்கியதில் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அதையடுத்து அவர் கடந்த 14-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய ஜாமீன் மனுவை, மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்தது. இந்தநிலையில், அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் காணொலிக்காட்சி மூலம் திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அங்கித்திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை வருகிற 11-ந்தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு பிரியா உத்தரவிட்டார். அதன்படி மீண்டும் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.