தவெக எம்எல்ஏவிடம் குதிரைபேரம் நடத்திய புகாரில் அதிமுக பிரமுகரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.
த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களிடம் மீண்டும் குதிரை பேரத்தில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது ஆதரவாக வாக்களிக்க முதல் கட்டமாக ரூ.15 கோடி தருவதாகவும், பின்னர் 15 கோடி தருவதாகவும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிமுக முக்கிய புள்ளி ஒருவர் தன்னிடம் பேரம் பேசியதாக மதுரை மத்திய தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரிடம், த.வெ.க-வின் அதிகாரத்தை மாற்றுவதற்காக எத்தகைய பேரம் பேசப்பட்டது?, இதற்கு பின்னணியில் வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் உள்ளனரா? இதற்கான திட்டமிடல் எங்கு நடைபெற்றது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரைப் போலீசார் கைது செய்தனர். அதிமுக நிர்வாகி மன்னன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தீவிர ஆதரவாளர் :
கைது செய்யப்பட்டுள்ள பி.எம். மன்னன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். மதுரை அரசியலில் அழகிரியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.