Rock Fort Times
Online News

இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும்…!

அமைச்சர் சேகர்பாபு தகவல்...

பழுதடைந்து இருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி கடந்த ஐந்தாம் தேதி நள்ளிரவு இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோபுரத்தை சீரமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இடிந்து விழுந்த கிழக்குவாசல் கோபுரத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே .என். நேரு , ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில் :

கடந்த 5-ம் தேதி இரவு ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. இதற்கான மராமத்து பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று ( 08.08.2023 ) ஆய்வு செய்தோம். மேலும், இப்பகுதியில் உள்ள 21 கோபுரங்களின் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய தொழில்நுட்பக் கழக வல்லுநர்கள் கோபுரத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த ஆய்வறிக்கை கிடைக்கப்பெறும். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும். கிழக்கு கோபுர வாசலை சீர் செய்ய ரூபாய் ஒன்றரை கோடி முதல் 2 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ணிகள் ஓராண்டு காலம் நடைபெறும். கோயில் நிதி அல்லது தனியார் பங்களிப்புடன் பழைமை மாறாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, நகர பொறியாளர் சிவபாதம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்