திருவெறும்பூர் பகுதிக்கு சாலை வசதி கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிக்கும் பொதுமக்கள்…!
திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முதல் ஊராட்சியான அரசன்குடி ஊராட்சியின் 5-வது வார்டு பகுதியில் தொண்டமான்பட்டி உள்ளது.
இந்த பகுதியில் உள்ள 80 வீடுகளில் 300 வாக்காளர்கள் உள்ளனர். தீவுபோல தனியாக உள்ள இந்தப் பகுதிக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சரியாக சென்று சேராமல் உள்ளது.
மேலும், இப்பகுதிக்கு அடிப்படை தேவையான சாலை வசதி இல்லாமல் இங்கு வசிக்கும் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள், தொண்டமான் பட்டியில் இருந்து பத்தாளப்பேட்டை திருவெறும்பூர் சாலைக்கு 500 மீட்டருக்குள் வரவேண்டிய தூரத்தை 13 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டி உள்ளது.
இதனால், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வயல்வெளிகளில் இறங்கி நடந்து செல்கின்றனர். அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸை அழைக்க முடியவில்லை.
ஆகவே, 500 மீட்டர் தூரத்தில் சாலை அமைத்து கொடுக்க வேண்டுமென நீண்ட நாட்களாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க வரும்பொழுது சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதோடு சரி அதன்பிறகு எட்டிக் கூட பார்ப்பதில்லை என இப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆகவே, தொண்டமான் பட்டியலில் இருந்து பத்தாளப்பேட்டை திருவெறும்பூர் சாலையை இணைக்கும் வகையில் 500 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க அதிகாரிகள் உறுதி அளிக்க வேண்டும். இல்லையெனில், தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம் அங்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது சம்பந்தமாக திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உங்களை நேரில் சந்தித்து பேசி முடிவு செய்வார். தேர்தலில் வாக்களிப்பது உங்களது உரிமை, கடமை என்று எடுத்துக் கூறினார். அதற்கு அப்பகுதி மக்கள் வந்து பேசட்டும், ஆனால் சாலை அமைக்கும் பணியை தொடங்கினால் மட்டுமே வரும் தேர்தலில் வாக்கு செலுத்துவோம், இல்லையென்றால் வாக்கு செலுத்த யாரும் வரமாட்டோம் என கூறியதோடு, தங்கள் பகுதியில் நியாய விலை கடை இல்லாததால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள அரசங்குடி சென்று அங்குள்ள நியாய விலை கடையில் பொருட்களை வாங்கி வருவதாக கூறினர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். ஒரு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள சம்பவம் அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.