Rock Fort Times
Online News

காங்கிரசுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கிய முதல்வர் விஜய்…* எம்பியாக பிரவீன் சக்கரவர்த்திக்கு அதிக வாய்ப்பு?

ராஜ்யசபா எம்பி ஆக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். காலியாக உள்ள இந்த பதவிக்கான தேர்தல் வருகிற 18- ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. அதேநேரத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியும் ராஜ்யசபா எம்பி பதவியை எதிர்பார்த்தது. இதுதொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசினார். தொடர்ந்து இன்று(ஜூன் 3) காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முதல்வர் விஜயை சந்தித்து ராஜ்யசபா சீட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்து உள்ளார். இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக நிறுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக கூட்டணிக்கு சட்டமன்றத்தில் போதிய பலம் இருப்பதால், இக்கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தவெக மற்றும் காங்கிரஸ் இடையே புதிய கூட்டணி உருவாவதற்குக் திரைமறைவில் முக்கிய பங்காற்றியவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆவார். இவர் காங்கிரஸ் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் மற்றும் காங்கிரஸின் தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பிரிவின் (Data Analytics) தலைவராகச் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் உத்தேசப் பட்டியலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகையின் பெயரும் அடிபட்டாலும், ராகுல் காந்தியின் நேரடி ஆதரவு இருப்பதால் பிரவீன் சக்கரவர்த்தியின் பெயரே முதலிடத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸின் மத்திய தேர்தல் குழு விரைவில் முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்