ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார்…* அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று(20-08-2026) கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர். விவாதத்தின் போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், பொதுமக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார். ரேஷன் அரிசி பெரும்பாலும் இட்லி மாவு தயாரிக்க மட்டுமே பயன்படும் என்ற நிலையை மாற்றி, மக்கள் நேரடியாகச் சமைத்து உண்ணக்கூடிய வகையில் சன்ன ரக அரிசியை வழங்கிட, சன்ன ரக நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாம் சிறுவயதில் இருந்தபோது ரேஷன் கடைகளில் நிறம் மாறிய அரிசியே கிடைத்தது. நம் சட்டமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசியை சமைத்து உண்கிறோமா? மனசாட்சிப்படி பேச வேண்டும். 90 சதவீத மக்கள் ரேஷன் அரிசியை நேரடியாகச் சமைப்பதில்லை. இந்நிலையை மாற்றவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுச் சமைக்க உகந்த சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நெல் பயிரிட்டு சாப்பிடும் கே.என்.நேரு, ரேஷன் அரிசி சாப்பிடுவது போலவும், பரம ஏழை போன்றும் பேசுகிறார். நான் சிறுவயதில் இருக்கும்போது ரேஷன் அரிசியை தான் சாப்பிட்டேன், அப்போது பெரிய அளவில் நிறம் மாறிய அரிசி தான் கிடைக்கும். மற்ற ஆட்சியை விட்டுவிடுங்கள். நமது ஆட்சியில் ரேஷன் கடையில் சன்னரக அரிசியை கொடுங்கள் என முதல்வர் கூறியுள்ளார். அதில் அவர் உறுதியாகவும் உள்ளார். இலவச மருத்துவமனை, இலவச கல்விமுறையை எந்த எம்எல்ஏவும் எந்த அமைச்சரும் பயன்படுத்துவதில்லை. எந்த அமைச்சருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனை செல்கிறாரா? மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கின்றனர். இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.