கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று(20-06-2024) கள்ளக்குறிச்சி சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து நலம் விசாரித்தார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், செய்தி யாளர்களிடம் கூறுகையில், மிகவும் வேதனையான சூழல் இது. கள்ளச்சாராயம் பருகி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழைகள். மாவட்ட தலைநகரில் காவல் நிலையத்துக்கு பின்புறமே சாராயம் விற்கப்படுகிறது. அப்படியெனில் திமுக ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரமிக்கவர்களே இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இல்லையெனில் இவ்வளவு துணிச்சலாக கள்ளச் சாராய விற்பனை நடைபெறுமா?. இதற்கு முன் விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்தபோதே அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வலியுறுத்தினேன். ஆனால், ஆளும் அரசு சிபிசிஐடி வசம் வழக்கை ஒப்படைத்தது. ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை 40 பேர் பலியாகி இருக்கிறார்கள். இன்னும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ கள்ளச்சாராய விற்பனை குறித்து புகார் அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் துறை முதல்வர் வசம் உள்ளது. இருந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது. திருச்செங்கோடு அருகே திமுக நிர்வாகி கள்ளச் சாராயம் விற்பனை செய்கிறார். போதைப்பொருள் விவகாரத்தில் பின்புலமாக திமுக தான் உள்ளது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
Comments are closed.