உலகப் புகழ் பெற்ற ‘நார்வே செஸ்’ தொடரை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அண்மையில் கைப்பற்றினார். இதன்மூலம் இந்த பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதனால் உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை பிரக்ஞானந்தா இன்று சந்தித்தார். அப்போது, நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையை முதலமைச்சரிடம் காட்டி அவர் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். முன்னதாக, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடினார். பொதுவாக, சாதாரணமாக செஸ் விளையாடுபவர்கள், ஒரு கிராண்ட் மாஸ்டருடன் மோதினால் 4 முதல் 5 நொடிகளிலேயே நாக் அவுட் ஆகிவிடுவார்கள். ஆனால், முதலமைச்சர் விஜய் பிரக்ஞானந்தா உடன் 15 நிமிடங்கள் விளையாடினார். இறுதியில், முதலமைச்சர் விஜய்க்கு கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா செக் மெட் வைத்து வெற்றி பெற்றார். இந்த வீடியோவை பார்த்த பலரும், முதலமைச்சர் விஜய் இவ்வளவு நன்றாக செஸ் விளையாடுபவரா? என ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, “நார்வே செஸ் தொடரில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்ததாக கூறி முதலமைச்சர் பாராட்டினார். அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரே செஸ் போர்டு எடுத்து வர சொல்லி என்னுடன் விளையாடினார். முதலமைச்சர் இவ்வளவு நன்றாக செஸ் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்க வில்லை.15 நிமிடங்கள் விளையாடினோம். சிறப்பான ஆட்டமாக இருந்தது. அதில் நான் வெற்றி பெற்றேன். இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

Comments are closed.