‘மத்திய அரசு பணியிடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்’ என்று பா.ஜ.க. அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, ‘ரோஜ்கர் மேளா’ என்ற மகா வேலைவாய்ப்பு முகாம்களை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, இன்று ( 22.07.2023 ) 7வது பணி நியமன ஆணை வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்று 200-க்கும் மேற்பட்டோருக்கு வங்கிகள், ரயில்வே உள்பட மத்திய பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா சிறப்பான வளர்ச்சி அடைய தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் விதமாக, ‘இந்தியா ஸ்டார்ட் அப்’, ‘இந்தியா ஸ்கில்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பிரதமர் மோடியின் முயற்சி காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தொடங்கப்பட்டு பொருளாதாரத்தில் நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். உலக பொருளாதார அரங்கில், ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில், கடந்த 6 மாதத்தில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில், சுங்கத்துறை உதவி ஆணையர் விஜயபாஸ்கர், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி மண்டல மேலாளர் காமேஸ்வரன், சுங்கத்துறை அதிகாரி கே.எம். ரவிச்சந்திரன், சுங்கம் மற்றும் சேவை வரி அதிகாரி அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.