Rock Fort Times
Online News

கடைசி நேரத்தில் விஜய் வைத்த ‘செக்’: எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு த.வெ.க.ஆதரவு..!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பரப்புரை வரும் ஏப்ரல் 21-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அருண்குமார் என்பவரின் வேட்பு மனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 சட்டமன்றத் தொகுதிகளில் தவெக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் பிரேம்குமாருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன், சுயேச்சை வேட்பாளர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான தமிழன் ஆ.பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான பிரேம்குமார்க்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும், நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் பிரேம்குமார், மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-ல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தை சேர்ந்த அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கட்சி நிர்வாகிகளையும், தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் மிக முக்கிமான தொகுதியாகப் பார்க்கப்படும் எடப்பாடி தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்