Rock Fort Times
Online News

திருச்சி அருகே 4 பேர் மீது சாதிய வன்கொடுமை தாக்குதல்…

3 பேர் மீது வழக்கு பதிவு...

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அபினிமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அசோக் குமார். இவரது தம்பி ஆனந்த்ராஜ், அவரது மனைவி முனீஸ்வரி ஆகியோர் ஊரில் இருந்து சற்று தள்ளி வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று சாத்தனூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் பிரவீன் ஆகியோர் இரவு 8 மணி அளவில் இவர்களது வீட்டின் எதிரே மது அருந்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அசோக்குமார், இங்கு மது அருந்த வேண்டாம் சற்று தள்ளி சென்று அருந்துங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அவரது சாதி பெயரை சொல்லி மோகன்ராஜ் திட்டியதோடு தனது உறவினர்களோடு சேர்ந்து அசோக் குமார், ஆனந்த்ராஜ், முனீஸ்வரி மற்றும் மாற்றுத்திறனாளியான அவரது தாய் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புலிவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாங்குநேரி சம்பவம் போல துறையூர் பகுதியில், சாதி வன்கொடுமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனைஅடுத்து புலிவலம் போலீசார் மூன்று பேர் மீது கூட்டம் சேர்த்து கலவரம் செய்வது, ஒருவரை காயப்படுத்துவது, சாதியின் பெயரை சொல்லி திட்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்