அ.தி.மு.க.வில் சாதி அரசியல்: இனியும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டேன்- தொண்டர்களை சந்தித்த சசிகலா பரபரப்பு பேச்சு…!
சென்னை போயஸ் கார்டனில் சசிகலா தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஏழை மக்களுக்கான இயக்கம். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, நான் உள்பட அனைவரும் பல துன்பங்களை அனுபவித்து இந்த இயக்கத்தை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே 3வது பெரிய இயக்கமாக கொண்டு வந்தோம். ஆனால் இன்று இந்த இயக்கம் தொடர் சரிவுகளையே சந்தித்து வருகிறது. ஒரு சில சுயநலவாதிகள் இந்த இயக்கத்தை இந்த அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவையனைத்தையும் நான் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். புரட்சித் தலைவர் எல்லோருக்கும் மரியாதை கொடுத்தவர். புரட்சித் தலைவர் எப்படி இருந்தாரோ, அதே போலவே தான் நானும் அம்மாவும் இருந்தோம். அம்மாவும் சாதி பார்ப்பவர் கிடையாது. அப்படி சாதி பார்த்து பழகியிருந்தால், உயர்சாதி வகுப்பை சார்ந்த அவர், என்னுடன் பழகியிருக்க மாட்டார். திமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்கி ஆடும். ஆனால், இங்கு சாதாரண ஏழை கூட எம்.பி. எம்.எல்.ஏ. ஆகலாம். நம் இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு முன்னுரிமை கொடுத்து சாதி அரசியல் செய்கிறார்கள்.
இதை நானும், தொண்டர்களும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நான் பெங்களூரு சென்றபோது, சாதி பார்த்திருந்தால், அவருக்கு வாய்ப்பளித்திருக்க மாட்டேன். இன்றைய நிலைமை, அதிமுக 3வது, 4வது இடத்துக்கு போய்விட்டது. டெபாசிட்டும் போய்விட்டது. சிலர் தானும் கெட்டு கட்சியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 2026ல் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சியை நிச்சயமாக அமைப்போம். இதற்காக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றார். சசிகலாவின் இந்த பேச்சை பார்க்கும்போது அவர் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியைதான் தாக்கி பேசி உள்ளார் என்பது புலப்படுகிறது.
அவரது இந்த பேச்சு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.