திருச்சி கே.கே நகர் அருகேயுள்ள ஜே.கே நகர் பகுதியில் 20 ஆண்டுகளாக பயன்பாட்டிலிருந்த தார் சாலை திடீரென முடக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் துரிதமாக செயல்பட்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட்டனர். திருச்சி, காஜாமலை மற்றும் கே.கே.நகர் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ஜே.கே நகர். திருச்சி மாநகராட்சியின் 61வது வார்டு வார்டில் அமைந்துள்ள இப்பகுதி மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்ட பகுதியாகும். இங்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள், குடிநீர் வடிகால் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ,ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ரயில்வே, காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகிறார்கள். மாநகராட்சி சார்பில், இங்குள்ள அனைத்து தெருக்களுக்கும் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. புதைவடிகால் திட்டப்பணிகளும் நிறைவு பெற்று இணைப்புகள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில்,ஜேகே நகர் விரிவாக்க பகுதியில் உள்ள கோதாவரி தெருவையும் அதன் அருகில் உள்ள லூர்து நகரையும் இணைக்கும் வகையில் தார் சாலை அமைக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஜே.கே நகர் பகுதி மக்கள் மட்டுமின்றி முகமது நகர் ,ஆர்எஸ் புரம் , திருமுருகன் நகர், ராஜகணபதி நகர், பாரதி நகர், ஆர்விஎஸ் நகர், காந்தி நகர் மற்றும் காஜாமலை, கேகே நகர் பகுதி மக்களும் இந்த சாலை வழியாக புதுக்கோட்டை சாலை மற்றும் விமான நிலைய பகுதியை எளிதாக கடந்து செல்ல முடியும். இந்த நிலையில் இந்த சாலையை தனிநபர் ஒருவர் பள்ளம் தோண்டி சிமென்ட் தூண்களை ஊன்றி, சிலாப் கற்கள் மூலம் அடைக்க முற்பட்டார். இதனை அறிந்த ஜே.கே நகர் மக்கள் நல சங்கத்தினர், திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து விமான நிலையை போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாலையை ஆக்கிரமித்து கல் நடும் பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது சாலையை அடைக்க முயன்ற நபர், போலீசாரிடம், தன்னுடைய பட்டா நிலத்தில் மாநகராட்சி சாலை அமைத்து இருப்பதாக கூறினார். அதனை கண்டித்த போலீசார், பட்டா நிலமாகவே இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள தார் சாலையை திடீர் என மறித்து முடக்குவது தவறு. உங்களுக்கு அதில் உரிமை இருந்தால், அதற்கான ஆதாரங்களை நில அளவையர் மூலம் அளந்து காட்டுங்கள். அதுவரை இந்த சாலையை மூடக்கூடாது. மூடினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை செய்தனர்.இதனை தொடர்ந்து பள்ளம் தோண்டப்பட்ட சாலை சரி செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் போலீசார் முன்னிலையில் சர்வேயர் மூலம் அளவீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ஜே.கேநகர் விரிவாக்க பகுதி மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் லூர்துநகர் பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஏற்கனவே சாலைக்கு உரிமை கொண்டாடிய நபருக்கும், இன்னொரு மனையின் உரிமையாளருக்கும் இடையே நில பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மனையை விற்பனை செய்த நபரிடம் முறையாக விசாரணை நடத்தி அதன் பின்னர் சாலை உள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்றும், அதுவரை சாலையை யாரும் மூடக்கூடாது என்றும் கூறி போலீசார் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். திருச்சி ஜே.கே நகர் விரிவாக்க பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் தார் சாலை திடீரென ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Comments are closed.