திருச்சி பெரியசூரியூரில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 750 மாடுகளும் 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு வீட்டுமனையும், சிறந்த மாட்டுக்கு டூவிலரும் பரிசாக வழங்கப்பட்டது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.காலை 7 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில், ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் மாடு முதலில் அவிழ்த்துவிடப்பட்டது.
அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், சிறந்த காளைக்கும் பரிசாக வீட்டுமனை வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது.4வது சுற்று முடிவில் 390 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஒரு போலீஸ்காரர், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 37 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் கீதா (40) நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.