பயணிகளை ஏற்றுவதில் போட்டா போட்டி: திருவாரூர் அருகே தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயம்…!
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கும், திருவாரூரிலிருந்து மயிலாடுதுறைக்கும் தினசரி செல்லக்கூடிய தனியார் பேருந்து இன்று (18-05-2024) காலை வழக்கம் போல மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு தனியார் பேருந்துக்கும், பின்னால் வந்த தனியார் பேருந்துக்கும் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது 2 பேருந்துகளின் ஓட்டுநர்களும் போட்டி போட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட தென்குடி என்கிற இடத்தில், முன்னால் சென்ற தனியார் பேருந்தை முந்துவதற்காக பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் முயற்சித்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல் வெளியில் கவிழ்ந்தது. இந்த பேருந்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில் அதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் 5 ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள நன்னிலம் அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். gooதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நன்னிலம் போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தனியார் பேருந்துகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு, வந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.