Rock Fort Times
Online News

மணப்பாறையில் 7 நாட்கள் நடக்கும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்…!

மாணவ, மாணவிகளிடையே நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை, தலைமைத்துவம் முதலான பண்புகளை வளர்த்து அவர்களை சிறந்த குடிமக்களாக உயர்த்தும் உன்னத நோக்கத்துடன் உலகம் முழுவதும் சாரண, சாரணிய இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டு வைரவிழா காண்கிறது. இதனை முன்னிட்டு,தேசிய அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சாரண, சாரணியர் இயக்கத்தின் பெருந்திரளணி இந்தாண்டு தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிப்காட் வளாகத்தில் நடத்தப்படுகிறது.  தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண, சாரணிய மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த ஜம்போரி என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நாளை (28-01-2025) தொடங்கி பிப்ரவரி 3-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவை, நாளை (28ம்தேதி) ஜம்போரி தலைவரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகிறார்.

இவ்விழாவில், இந்தியா முழுவதிலும் இருந்து சாரண, சாரணிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இதற்காக,மொத்தம் 2 ஆயிரத்து 422க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளியல் அறைகள் மற்றும் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. உணவு தயாரித்து வழங்கும் வகையில் 72 சமையல் கூடங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட உணவு அருந்தும் கூடங்களும், 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாரண. சாரணியர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக 50க்கும் மேற்பட்ட கடைகளுடன் கூடிய மார்க்கெட்டுகள், தடையில்லாத மின்சாரம் வழங்கவும்,ஜெனரேட்டர் வசதிகளும், 25 படுக்கை வசதிகளுடன் கூடிய 2 மருத்துவமனைகள், 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள், அவசர உதவிக்காக 15 ஆம்புலன்ஸ் வாகனங்களும் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா நடைபெறும் வளாகத்தில் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் தமிழர் பண்பாடு பிரதிபலிக்கும் வகையில் ‘மாதிரி கிராமம்’, கலைஞர் அரங்கம், வெளிநாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும், சாரண, சாரணியர்கள் மலையடியப்பட்டியில் மலையேற்றம் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முதலே வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சாரண, சாரணியர்களும், ஆசிரியர்கள், அலுவலர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால், அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவை முன்னிட்டு, சிப்காட் வளாகத்திலும் அதனைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை, தமிழக சாரணர் இயக்கத் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கலெக்டர் பிரதீப்குமார் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது. 2-ந்தேதி நடைபெறும் நிறைவு விழாவில், தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். மேலும், இடையிடையே மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிமாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அரசு உயர்அதிகாரிகள் உள்ளிட்டோரும் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்