கடந்த திமுக அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. அப்போது அவர் தனது பதவி காலத்தில் (2021 முதல் 2025-ம் ஆண்டு வரை) ரூ.1000 கோடி அளவுக்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க தமிழக வெற்றிக் கழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில் நேற்று(ஜூலை 29) செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்து, முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில், செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை அவரது சார்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் கபில் சிபல் ஆகியோர் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை நாள (ஜூலை 31) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Comments are closed.