Rock Fort Times
Online News

முன்ஜாமீன் மனு தள்ளுபடி: எந்த நேரத்திலும் கைதாகிறார் செந்தில் பாலாஜி?

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவுகிறது. திமுக ஆட்சியில் செல்வாக்கு கொண்ட அமைச்சராக வலம் வந்தவர் கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி. தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகிறது. அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் 1000 கோடி மோசடி, டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு என பல்வேறு வழக்குகள் தூசு தட்டப்பட்டு தற்போது விசாரணையில் இருக்கிறது. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி, அவர் தம்பி அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று( ஜூலை 29) தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு எம்பி – எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு இன்று(30-07-2026) விசாரணைக்கு வந்தது. அப்போது முறைகேடு நடந்ததாக கூறுவதில் டாஸ்மாக் நிறுவனத்துக்கோ அல்லது செந்தில் பாலாஜிக்கோ எந்த தொடர்பும் இல்லை எனவும், இது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை முன்வைத்தது. அப்போது, செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என கூறிய நீதிபதி, எதனடிப்படையில் முன் ஜாமீன் கோருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. அதற்கான உரிய ஆதாரங்கள் உள்ளன என காவல்துறை கூறியது. இதனையடுத்து டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். இதனால் செந்தில் பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்