ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில், ஹரியானாவில் பாஜகவும் , ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளது. ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல, ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த இரு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(08-10-2024) காலை 8 மணி அளவில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் காலை 10 மணி நிலவரப்படி ஹரியானாவில் பாஜக 50 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 33 இடங்களிலும் பிற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. இதேபோல ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 52 இடங்களிலும் பாரதிய ஜனதா 24 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹரியானாவில் பாரதிய ஜனதா இருமுறை ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.
Comments are closed.