இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளில் திமுக விறுவிறு: 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்…!
திருச்சி மேற்கு- பழஞ்சூர் செல்வம் திருச்சி கிழக்கு- கதிரவன் திருவெறும்பூர்- மணிராஜன் ஸ்ரீரங்கம்- சந்திரசேகரன்
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல் – அமைச்சராக மு.க.ஸ்டாலினும், துணை முதல்- அமைச்சராக உதயநிதி ஸ்டாலினும் பதவி வகித்து வருகின்றனர். இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் திமுக தற்போதையிலிருந் தே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் திமுக உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தல் முடிந்ததுமே, முதல் கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அதன்படி, 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கட்சி ரீதியாக செய்ய வேண்டிய சீரமைப்புகள் தொடர்பாக பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது, 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் பழஞ்சூர் கே.செல்வமும், திருச்சி கிழக்கு தொகுதிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிரவனும், திருவெறும்பூர் தொகுதிக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிராஜனும், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் சந்திரசேகரனும், மணப்பாறை தொகுதிக்கு மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலையும், முசிறி தொகுதிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் விநாயகமூர்த்தியும், துறையூர்( தனி) தொகுதிக்கு பெரம்பலூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்ககமலும், மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு அரியலூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமராஜனும், லால்குடி தொகுதிக்கு மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆடுதுறை உத்தராபதியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.