சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரசேகர்(45). சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவர், தற்போது சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு ஜீப் ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி பணி முடிந்து ஓய்வுக்கு சென்ற காவலர் சந்திரசேகரை 18ம் தேதி ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டபோது சத்தியவேடு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் இவருடன் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்ததுடன் அங்களிடமிருந்து 3 டன் செம்மரக்கட்டை, ஒரு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை சத்தியவேடு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைதான காவலர் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சந்திரசேகர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே இவருக்கும் செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் செம்மரம் கடத்தல் வழக்கில் சென்னை காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.