‘நீட்’ வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி புதுடெல்லி ஜந்தர் மந்தர் திடலில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று பேரணி சென்றனர். நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்ல முயன்றதால் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டதால் ராகுல் காந்திக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டும், குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘நீட்’தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது. நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே, மத்திய அரசு ‘நீட்’ தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.