Rock Fort Times
Online News

அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு: திருச்சியில் திருமாவளவன் பேட்டி…!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று(27-08-2024) திருச்சி வந்தார்.  அவரை திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி மாநகர, மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், மாநில நிர்வாகிகள் அரசு,  இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் அப்துல்லா மற்றும் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.  பின்னர், செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில்,  வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ளது.  தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே மதுவிலக்கு குறித்த ஒரு தேசிய கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.  மதுவுக்கு மாற்றாக கள் உள்ளிட்ட எந்த போதை பொருட்களும் தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.  எம்ஜிஆர்.  வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிறபோது திமுகவிலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் கட்சியை நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள். அதனால் வெற்றி பெற முடிந்தது.

அதன்பிறகு சினிமா மூலம் வந்த தலைவர்கள் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை.  அரசியல் கட்சி தொடங்கியுள்ள  விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள். அவர் அரசியல் எவ்வளவு கடினமானது; போராட்டங்கள் நிறைந்த ஒரு களம் என்பதை இனி நடைமுறையில் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும்.  அதில் தாக்குப் பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் விஜய் அரசியல் குறித்து நாம் ஒரு கருத்தை சொல்ல முடியும். அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.  முருகன் மாநாடு சிறப்பாகவே நடந்தேறி இருக்கிறது.  அதில் விமர்சிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை. ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பக்தி இலக்கியங்கள் தொடர்பான போட்டிகள் நடத்தப்படும் என்று சொல்லி இருப்பது பரவலாக ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறது.  அது மதம் சார்ந்த நடவடிக்கையாக அமைந்து விடாமல், அரசு கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.  “முத்தமிழ் முருகன் மாநாடு மூலம் திமுக- பாஜக ஒன்றாக இணைவது போன்ற ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறதா என்ற கேள்விக்கு , யூகமான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார் .  பின்னர்  திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக மயிலாடுதுறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு புறப்பட்டு சென்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்