“கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தில் விடுபட்ட நபர்கள், நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் நாட்டிலுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ந் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதற்கட்டமாக 20 ஆயிரத்து 765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற்றது. 2-ம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்தவகையில் மொத்தம் 1.48 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள், நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வராதவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத பயனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.