விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரசு வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். அதிகாரிகளும் குறிப்பிட்ட காலத்துக்குள் படிப்படியாக முடிப்பதாக கூறியுள்ளனர். ஆய்வுக் கூட்டம் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மதுரையை விட சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றார். அப்போது அவரிடம் தங்களது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது அதிமுகவின் விருப்பம். அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உடனிருந்தனர். முன்னதாக, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக முழு மதுவிலக்கு கொள்கைக்கான செயல் திட்டத்தை வரையறுக்க வேண்டும். எந்த போதை பொருளும் கூடாது என்பதே விசிக நிலைப்பாடு. மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அதிமுக மாநாட்டுக்கு வரட்டும். எந்த கட்சியும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.