திருச்சியில், ஜூலை 6-ம் தேதி எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு..
பிரம்மாண்டமாக நடத்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் முன்னேற்பாடுகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் அருணகிரி தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலாளர் ப. குமார் பங்கேற்று விழா குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் இதுவரை 1.75 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பது, திருச்சி பெல் வளாகத்தில் ஜூலை 6-ம் தேதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கும் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்துவது, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டில் வலிமையை நிரூபிக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், விலையில்லா லேப்டாப் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர், பாலன், பொருளாளர் இளங்கோ, துணை செயலாளர் சுபத்ராதேவி, இணை செயலாளர் ரீனா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.