Rock Fort Times
Online News

தஞ்சை அருகே அ.தி.மு.க. பிரமுகர் படுகொலை…

கடைகள் அடைப்பு

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிரபு அ.தி.மு.க.வில் நகர இளைஞர்-இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். வாய்ப்பை இழந்த போதிலும் அ.தி.மு.க மற்றும் , வணிகர் சங்க பேரமைப்பில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பழமார்நேரி சாலை பகுதியில் பாரதிராஜா என்பவர் மீது நடைபெற்ற தாக்குதல் வழக்கில், இவரும் சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் பழமார்நேரி சாலையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் அவர் அமர்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில், தலை மற்றும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் சம்பவ இடத்திலேயே , பிரபு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக பிரபுவின் மனைவி சரண்யா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரில் பழமார்நேரி சாலையில் உள்ள பாரதிராஜாவுக்கும், தனது கணவருக்கும் இடம் குறித்து பிரச்சனை இருந்து வந்தது. இந்த பிரச்சனையில் தற்போதைய பேரூராட்சி கவுன்சிலர் பாஸ்கரன் பாரதிராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். நேற்று இரவு பாரதிராஜா, மணிகண்டன், ரமேஷ் ,மஸ்தான் என்கிற நாகராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து கணவரை வெட்டி கொலை செய்து விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். வணிகர் சங்க பேரமைப்பில் பிரபு முக்கிய பொறுப்பு வகித்ததால் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பந்தமாக சிலரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்