தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும், ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இந்நிலையில் மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக 23 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீதமுள்ள தொகுதி நிர்வாகிகளுடன் 2-ம் கட்டமாக ஆலோசித்து வருகிறார். இன்று(25-07-2024) தென்காசி மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில், தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, “இந்தத் தேர்தலில் நாம் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. கூட்டணியும் பலமாக இல்லை. அதனால் அதிக வாக்குகளை பெற முடியவில்லை. எங்களால் முடிந்தவரை கூட்டணி கட்சி வேட்பாளருக்காக பாடுபட்டு உழைத்தோம்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவினர் அனைவரும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும். அதற்காக கட்சியில் அதிக அளவில் இளைஞர்களைச் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பலமான கூட்டணி அமையும்” என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
Comments are closed.