Rock Fort Times
Online News

கழகத்தின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகுது…- மு க ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(14-05-2026) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் ஆட்சியை அமைத்திருக்கிறது. நமது கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடுதான் ஆட்சி அமைந்திருக்கிறது. நமக்கு பெரும்பான்மை கிடைக்வில்லையே தவிர, கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்திருக்கிறது. பொதுவாழ்க்கைக்கு வந்தால் வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத்தான் அதிகம். இதுதான், அண்ணா மற்றும் கலைஞர் நமக்கு கற்றுக் கொடுத்தப் பக்குவம். நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதுதான் நிதர்சனம். இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது. தமிழ்நாட்டு மக்களை இதில் இருந்து, எப்படி மீட்டெடுக்கப் போகிறோம் என்பதைப் பற்றி யோசியுங்கள். எங்கு கோளாறு நடந்தது? எங்க மெத்தனம் ஏற்பட்டிருக்கிறது? என்பதுதான் முக்கியம். இதை ஆய்வு செய்ய வேண்டும். இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, நாம் மீண்டெழ முடியாத தோல்வி அல்ல. தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியாக, நமது அனைத்து மட்ட நிர்வாகிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். அதற்காக தலைமைக் கழகத்தின் சார்பில் கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போகிறேன். அவர்கள் தமிழ்நாடு முழுவதும், தொகுதி வாரியாக, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்தித்து பேசி அடுத்த 20 நாட்களுக்குள் எனக்கு அறிக்கை தருவார்கள். உடன்பிறப்புகள் வெளிப்படையாக தகவல் கூற தனி ’வெப்சைட்’ நாளையே அறிவிக்கப்படும். தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு, வெப்சைட் மூலமாக கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் நம் மேல் அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லும் ஆலோசனைகளையும் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறேன். அந்த மாற்றம்தான், நம் கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்க போகிறது. நமது அரசியல் எப்படி இருக்க வேண்டுமென்றால், கடந்த ஐந்தாண்டுகளில் நாம் உருவாக்கிய திட்டங்களை தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும். இந்த தோல்வியை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். நாம் பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரர்கள். நமது இந்த தோல்வி தற்காலிகம்தான். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்