திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம் வனச்சரகத்துக்கு உட்பட்ட மலையடிவாரக் கிராமம் வேம்பையாபுரம் ஊருக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து ஐயப்பன் என்பவர் வளர்த்து வந்த ஆட்டை தாக்கி குதறி உள்ளது. ஆடு அலறும் சத்தம் கேட்டு எழுந்த ஐயப்பன் வெளியே சென்று பார்த்தபோது ஆட்டை விட்டுவிட்டு அங்கு நின்ற நாயை சிறுத்தை தூக்கிச் சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் இளையராஜா உத்தரவின்பேரில் பாபநாசம் வனச்சரகர் சத்யவேல் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர், அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், நள்ளிரவு வேம்பையாபுரம் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த 5 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறை கால்நடை மருத்துவக்
குழுவினர் சோதனை செய்தபின் மணிமுத்தாறு வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

Comments are closed.