அமெரிக்க நிறுவன பொருட்களை திருச்சியில் போலியாக தயாரித்து விற்பனை செய்த, கைப்பேசி விற்பனை நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் நேற்று ( 20.07.2023 ) உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் மெமரி கார்டுகள், கார்டு ரீடர்கள், டிஜிட்டல் ஆடியோ உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறது. இந்த பொருட்களை திருச்சியில் சிலர், அந்நிறுவனத்தின் முத்திரையுடன் போலியாக தயாரித்து விற்பனை செய்த விவரம் அந்நிறுவனத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து தில்லி மஸ்ஜி சாலையை சேர்ந்த அந்நிறுவனத்தின் பிரதிநிதி, திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இது குறித்து கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட (பொறுப்பு) நீதிபதி பாலாஜி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத் தோப்பு பகுதிகளில் உள்ள சில குறிப்பிட்ட கைப்பேசி விற்பனை நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி கோட்டை போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.