Rock Fort Times
Online News

கணவர்-மகளுடன் தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை…! கடன் தொல்லை காரணமா?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் உள்ள பொம்மை தெருவை சேர்ந்தவர் அருண்லால்(வயது 51). இவர் ராசிபுரம் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தேவிபிரியா (40). இவர் ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் பெங்களுருவில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகள் மோனிஷா (16), 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அருண்லால், தேவிபிரியா, மோனிஷா ஆகியோர் நேற்று இரவு வீட்டில் தூங்கினர். இன்று ( 12.07.2023 )காலை வெகுநேரமாகியும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு லேசாக திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அருண்லால், தேவிபிரியா தம்பதி மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு கொண்டு பிணமாக தொங்கினர். அவர்களுக்கு பக்கத்தில் மோனிஷா விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி ராசிபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ராசிபுரம் டி.எஸ்.பி.செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், கடன் பிரச்சனை காரணமாக அவர்கள் இந்த துயர முடிவை எடுத்து இருக்கலாம் என்று தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்