கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சி.விஜயகுமார் இன்று காலை ( 07.07.2023 ) கேம்ப் ஆபிஸில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனி மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த இவாின் அப்பா விஏஓவாக பணியாற்றியவர். குரூப் 1 தேர்வு எழுதி 2003-ம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். இருப்பினும் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி 2009-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ்ஸாக தேர்வானார். காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சிபிசிஐடி எஸ்பியாக பணியாற்றியுள்ள இவர், சிபிசிஐடி எஸ்.பியாக பணியாற்றிய போது டி.என்.பி.எஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தார்.
சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார். இவர் அண்ணாநகர் துணை ஆணையராக இருந்த காலகட்டத்தில் அரும்பாக்கத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 40 மணி நேரத்திற்குள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவு உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிவந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அவர், பணிக்காலத்தில் நற்பெயரைப் பெற்றுள்ளார். சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பதவி வகித்து வந்த இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் இவா் கேம்ப் ஆபிஸில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. பணிச்சூழல் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தனிப்பட்ட காரணங்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.