தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 27-ம் தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் – திருப்பதி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வாரியத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான ஒப்புதல் கிடைக்கவில்லை, சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே அதிகபட்சமாக மணிக்கு130 கி.மீ. வேகத்தில் செல்ல ரயில் பாதைகள் தயாராக உள்ளன. ரயில்வே வாரியம் ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னை – திருப்பதி வந்தே பாரத் ரயிலுக்கான கால அட்டவணை, கட்டணம், பயண நேரம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.