திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தினங்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இங்கு ஈசன் மலை உருவில் ஜோதி வடிவில் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இக்கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் பக்தர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு துறைகள் இணைந்து வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தந்து வருகின்றனர்
இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ரூ.78 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டம் வரைவு (மாஸ்டர் பிளான்) தயாரிக்கப்பட்டு, செயல்படுத்திடும் வகையிலான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சிறப்பு ரெயில்களை இயக்கிட மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் தென்னக ரெயில்வேக்கு கருத்துருக்களை அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ. 50-60T மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.