திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே 1963-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் 14 தாங்கு தூண்கள் உள்ளன. இந்த தாங்கு தூண்களுக்கும், பாலத்தின் சிலாப்களுக்கும் இடையே 120 பேரிங்குகள் உள்ளன. பாலத்தின் மீதுள்ள சாலையில் 16 இணைப்பு பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், பழைய காவிரி பாலத்தில் 2010-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 16 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இப்பாலத்தில் மீண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. பழைய பாலத்தில் உள்ள 14 தாங்கு தூண்களுக்கும், பாலத்தின் சிலாப்களுக்கும் இடையே உள்ள 120 பேரிங்குகள் மாற்றப்பட உள்ளன. இப்பணிகளை 3 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த பாலம் நேற்று இரவு முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்
இந்த பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரில் இருந்து புதிய காவிரிப்பாலம், கொண்டையம் பேட்டை வழியாகவும். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சர்க்கார்பாளையம் அணுகு சாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவிநகர் வழியாகவும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.