தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே அமைந்துள்ள உயர்மட்ட பாலம் கடந்த 2008-ம் ஆண்டு கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில், நவக்கிரக கோவில்கள், வேளாங்கண்ணி மாதா கோவில், பூண்டி மாதா கோவில், நாகூர் தர்கா போன்ற தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் டெல்டா மாவட்டங்களில் அமைந்துள்ளதால் இந்த தேசிய நெடுஞ் சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பாலத்தை பராமரிக்கும் பணியை பிரபல தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாலம் முறையாக பராமரிக்கப்படாததால் செங்கிபட்டி பகுதியில் உள்ள இந்த உயர் மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இன்று ( 20.06.2023 ) அதிகாலை திடீரென சரிந்து விழுந்தது.

அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் உயிர்ப்பலி ஏதும் இல்லை. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் பாலத்தின் தரம் மற்றும் உறுதி குறித்து முறையாக ஆய்வு செய்து பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை சீரமைக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். பாலம் சரிந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.