திருச்சியில் நடைபெற்ற உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு “வாழ்ந்து காட்டுவோம் திட்டம்“ கண்காட்சியினை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ( 19.06.2023 ) துவங்கி வைத்து உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் :
தமிழகத்தில் முதல் முறையாக இந்த கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. சுய உதவி குழுக்களுக்கு நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் திருச்சியில் நடந்த நிகச்சியில் 1756 கோடி அளவில் வங்கி கடனை வழங்கினோம். பெரிய பிராண்டுகளின் மீது இல்லாத நம்பிக்கை கூட நீங்கள் தயாரிக்கும் சின்ன சின்ன பொருட்களின் மீது வந்துள்ளது. விளையாட்டு துறையில் நான் பரிசளிக்கும் போதெல்லாம் மகளிர் சுய உதவி குழுக்களிடம் வாங்கி தான் பாிசு கொடுத்து வருகிறேன்.
கைவினை பொருட்களை ஊக்குவிக்க , அதனை சந்தைபடுத்த இந்த அரசு முழுவதும் துணை நிற்கும். திராவிட மாடல் அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு. மகளிர் சுய உதவி குழுவை பொறுத்த வரை நாங்கள் உங்களுக்கு வழங்குவது கடன் அல்ல, உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. விரைவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பூமாலை வணிக வளாகங்களை உருவாக்க உள்ளோம். கண்டிப்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக குழுக்கள் அமைக்க வழி வகை செய்வோம் என்று கூறினாா். 
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பா .செந்தில்குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் எஸ்.திவ்யதர்ஷினி , வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை செயலாக்க அலுவலர் பத்மஜா , திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ், திருச்சி மேயா் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.