திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள மேலவாளாடி எனும் கிராமத்தில் இந்த மாதம் 2-ம் தேதி யாரோ சிலர் ரயில்வே தண்டவாளத்தில் இரு லாரி டயர்களை வைத்தனர். தக்க நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த வழியாக திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்ற கன்னியாகுமரி விரைவு ரயில் இந்த இடத்தில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், திருச்சி இருப்புப்பாதை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்ததாக லால்குடி மேலவாளாடியை சேர்ந்த நாகரெத்தினம் மகன் வெங்கடேஷன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரும், லால்குடி மேலவாளாடியை சேர்ந்த அண்ணாவி மகன் பிரபாகரன் மற்றும் அதே ஊரை சேர்ந்த கஜேந்திரன் மகன் கார்த்திக் ராஜா ஆகிய 3 பேரும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் பேரில் அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாளாடி ஊராட்சி மேலவாளாடிக்கு சரியான அடிப்படை வசதிகள் இல்லாததாலும் , ரயில்வே நிர்வாகம் சாலை சுரங்கபாதையை எல்.சி. கேட் இருந்த இடத்திலேயே அமைத்து கொடுக்காததாலும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவே இச்செயலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.