திருச்சி, கம்பரசம்பேட்டையில் அடிப்படை வசதி வேண்டி 13 ஆண்டுகளாக போராடிய மக்கள்… * உடனடி ஆக்க்ஷனில் இறங்கிய அமைச்சர் எஸ்.ரமேஷ்!
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது, கம்பரசம்பேட்டை. இதன் அருகே வெள்ளாந் தெரு, கணபதி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. சுமார் 13,000க்கும் அதிகமானவர்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். ஆனால், கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் சாலை வசதி இல்லவே இல்லை. மழை மற்றும் வெள்ள காலங்களில் பெயருக்கு ஏற்றார்போல வெள்ளாந்தெரு பகுதி வெள்ள மேடாகவே காட்சி அளிக்கும். இதனால் இப்பகுதியிலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தொடங்கி அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள் வரை அனைவருமே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முத்தரசநல்லூர் ஊராட்சியோடு இணைக்கப்பட்டிருந்த வெள்ளாந்தெரு, கணபதிநகர் உள்ளிட்ட பகுதிகள் தற்போது திருச்சி மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு முத்தரசநல்லூர் ஊராட்சியில் சென்று கேட்டால், மாநகராட்சியிடம் சென்று கேட்கும்படியும், மாநகராட்சியில் சென்று முறையிட்டால் ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும்படியும் மக்களை அரசு அதிகாரிகள் அலைக்கழித்து வந்தனர்.
இந்நிலையில், வெள்ளாந்தெருவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஸ்ரீரங்கம் தொகுதி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினரும், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சருமான எஸ். ரமேஷிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக இதை பரிசீலித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளை உடனடியாக இப்பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார். அதனடிப்படையில், அந்தநல்லூர் பிடிஓ தலைமையிலான அதிகாரிகள் குழு, கடந்த நவம்பர் 19ம் தேதி இப்பகுதியில் விரிவான ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில், வெள்ளாந்தெரு, கணபதிநகர் முதல் கிராஸ் முதல் பன்னிரண்டாவது கிராஸ் வரையுள்ள பகுதிகள் மற்றும் கணபதிநகர் விஸ்தரிப்பு ஆகிய பகுதிகளில் தார்சாலை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 120 தெரு மின்விளக்குகளும் சரியான முறையில் இயங்குகின்றனவா எனவும் ஆய்வு செய்துள்ளனர். கூடவே, இப்பகுதியில் முக்கியமான இடங்களில் குப்பை கொட்ட ஏதுவாக பொது குப்பைத் தொட்டிகளும் வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வெள்ளாந்தெரு மற்றும் கணபதி நகரில் சாலை அமைப்பதற்காக முதல் கட்டமாக ரூ.90 லட்சம் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்புதல் வந்தவுடன் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என அமைச்சர் ரமேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தார்சாலை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வந்த வெள்ளாந்தெரு கணபதிநகர் மக்கள் உடனடியாக இவ்விஷயத்தில் ஆக்க்ஷன் எடுத்த அமைச்சர் ரமேஷிற்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


Comments are closed.