Rock Fort Times
Online News

நாளை கார்த்திகை தீபம்; திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்…!

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரும் நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை(24-11-2026) கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இதற்காக நேற்று முதலே வெளியூர்களில் இருந்து பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் நலன் கருதி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் கோயிலில் ஏற்றப்படும். அந்த தீபத்தை காண்பதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு 3 ஆயிரம் பக்தர்களுக்கு கட்டணமின்றி ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

10 தற்காலிக பேருந்து நிலையங்கள்,

தீபத்தை காண்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்காக வெளியூர் பயணிகள் வசதிக்காக திருவண்ணாமலையில் மொத்தம் 10 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை புதிய பேருந்துநிலையம் மட்டுமின்றி வேட்டலவம் ரோடு – சர்வேயர் நகர், திருக்கோவிலூர் சாலை – மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானம், செங்கம் சாலை – விட்டோடிகள் நிலம், மணலூர்பேட்டை ரோடு – சண்முகா கல்லூரி கேட் நம்பர் 3 எதிரில் உள்ள மைதானம், செங்கம் ரோடு – அத்தியந்தல் மைதானம், காஞ்சி, கடலாடி சாலை – டான் பாஸ்கோ பள்ளி மைதானம், செங்கம் ரோடு – சாந்தி ஜுவல்லரி மைதானம், அவலூர் பேட்டை ரோடு – கிளியாப்பட்டு கிராமம் வடிவேல் நிலம், வேலூர் ரோடு – அண்ணா நுழைவு வாயில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில் ஏகேஎஸ் நகர் மற்றும் மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலம் செல்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோயில்களிலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்