Rock Fort Times
Online News

வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… புயலாக வலுப்பெறுமா? மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

வங்கக்கடலில் நாளை (நவம்பர் 13) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி, தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 15-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னர் மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், புயலாக மாறுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இதற்கிடையே, நவம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் சீற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலை அறிவிப்புகளைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எல் நினோ தாக்கம் தீவிரமடையக்கூடும் எனக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் இந்தியாவின் பருவமழையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வு மற்றும் தீவிரத்தை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் குறித்த அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்