Rock Fort Times
Online News

திருச்சி முக்கொம்பு கதவணையும் மூன்று கட்சிகளின் முக்கோண அரசியலும்…

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கும், வெள்ளநீர் மேலாண்மைக்கும் மிக முக்கியமான நீராதாரமாக விளங்குவது திருச்சி முக்கொம்பு மேலணை. பல தலைமுறைகளாக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்த அணை, கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது பெரும் சேதத்தைச் சந்தித்தது. அதன்பிறகு புதிய கதவணை கட்டுமானம், திறப்பு விழா, தற்போது மீண்டும் சீரமைப்புப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு என முக்கொம்பு அணை விவகாரம் தமிழக அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.

2018-ல் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்பு…

2018 ஆகஸ்ட் 22-ம் தேதி காவிரியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக முக்கொம்பு கொள்ளிடம் பழைய மேலணையின் 6 முதல் 14 வரையிலான மதகுகளின் தூண்கள் மற்றும் கதவுகள் இடிந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் 182 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டமைப்பு சேதமடைந்ததைத் தொடர்ந்து,புதிய கதவணை அமைக்க ₹387.60 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.. அதிமுக ஆட்சிக்காலத்தில் திட்ட அறிவிப்பு, நிதி ஒதுக்கீடு, ஒப்பந்தம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான தொடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திமுக ஆட்சியில் தொடர்ந்த கட்டுமானம்… 2024-ல் திறப்பு !

2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது புதிய கதவணை கட்டுமானப் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2022 ஜூன் மாதத்தில் சுமார் 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அப்போதைய அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்நிலையில், திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.414 கோடியாக உயர்த்தப்பட்டது. 767.5 மீட்டர் நீளத்தில் 55 மதகுகளுடன் புதிய கொள்ளிடம் கதவணை அமைக்கப்பட்டது. மேலும், நீர் வெளியேற்றத்தை கண்காணிக்கும் நவீன தொழில்நுட்ப வசதியும் ஏற்படுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டிலேயே திறப்பு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் 2024 பிப்ரவரி 27-ம் தேதிதான் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கொள்ளிடம் கதவணையைத் திறந்து வைத்தார். இதன்மூலம், 2018-ல் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட புதிய கதவணை, திமுக ஆட்சிக்காலத்தில் கட்டுமானம் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது.

தற்போது மீண்டும் ₹126 கோடி… எதற்காக இந்தச் சீரமைப்புப் பணி ?

புதிய கொள்ளிடம் கதவணை திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில், முக்கொம்பு காவிரி கதவணையின் கீழ்ப்பகுதியில் உள்ள பாதுகாப்புத் தரைத்தளம் சேதமடைந்துள்ள விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 1974 முதல் 1977-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட காவிரி கதவணையின் கீழ்ப்பகுதியில் உள்ள கான்கிரீட் தரைத்தளமும் பெரிய பாறைகளும் சேதமடைந்து சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, 2021-ம் ஆண்டு பருவமழைக் காலத்தில் 100 நாட்களுக்கும் மேலாக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் இந்தச் சேதம் ஏற்பட்டதாக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பாதுகாப்புத் தரைத்தளம் ஆற்றின் நீரோட்டத்தால் அடிப்பகுதி மண் அரிக்கப்படுவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனைச் சீரமைக்க சுமார் ரூ.150 கோடி மதிப்பில் முன்மொழிவு தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.126 கோடிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு விரைவில் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு ஆட்சிகளின் பணிகள்… எழும் முக்கியக் கேள்விகள் !

முக்கொம்பு விவகாரத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய கொள்ளிடம் கதவணை கட்டுமானத்திற்கான திட்டம் உருவாக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சிக்காலத்தில் அந்தக் கட்டுமானம் நிறைவடைந்து திறக்கப்பட்டது. அதேவேளையில், காவிரி கதவணையின் கீழ்ப்பகுதி பாதுகாப்புத் தரைத்தளம் நீண்டகாலமாகச் சேதமடைந்த நிலையில் இருந்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

2025-ம் ஆண்டிலேயே விவசாயிகள் அமைப்புகள் இந்தச் சீரமைப்புப் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தன. 2026-ம் ஆண்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியில் ஆகஸ்ட் மாதம் ரூ.126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இந்தப் பிரச்சினைக்கு அரசு எடுத்துள்ள தற்போதைய நடவடிக்கையாகும்.

இருப்பினும், பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கு முறையான காலமுறை பராமரிப்பு ஏன் மேற்கொள்ளப்படவில்லை? அணையின் பாதுகாப்புத் தரைத்தளம் சேதமடைந்ததை முன்கூட்டியே கண்டறிந்து சீரமைத்திருக்க முடியாதா? தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.126 கோடி எந்தெந்த பணிகளுக்காகச் செலவிடப்பட உள்ளது? என்பது தற்போது காவிரி டெல்டா விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்