சமயபுரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது: போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு…!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதி அருகே தீபாவளி அன்று இரண்டு சிறுவா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் பகுதியை சோ்ந்தவா் செ.ராகுல் (17), இவரது உறவினா் வழி சகோதரரான அதே பகுதியை சோ்ந்தவா் ரா.விஷால் (17), இருவரும் கூலித் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அன்று இரவு சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரமாக அமா்ந்து இருந்துள்ளனா் . அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், ராகுல் மற்றும் விஷாலை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த இரட்டைக் கொலை தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ் உத்தரவின் பேரில் , சமயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன் உள்ளிட்ட காவல் துறையினா் மூன்று தனிப்படைகள் அமைத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதுகுறித்து ராகுலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் கெனி வின்ஸ், கரனிஷன், சரவணன், சிவநேசன், கிருபாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், இரட்டைக் கொலை வழக்கின் முதன்மை குற்றவாளியான சிவனேசனை தூத்துக்குடியில் இருந்து போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் அவரை சமயபுரத்தில் தான் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொடுப்பதற்காக அழைத்துச் சென்ற போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினான். அப்போது, சிவனேசனின் கணுக்காலில் சமயபுரம் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சிவனேசனுக்கு காலில் காயம் ஏற்பட்டதில் சுருண்டு விழுந்தான். இதனைத் தொடர்ந்து சிவனேசனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதைத்தொடர்ந்து காயமடைந்த தலைமை காவலர் மற்றும் சிவனேசனை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருச்சியில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உயிரிழந்த ராகுலுக்கும், குற்றவாளி கெனி என்பவருக்கும் இடையே ஒரு சிறுமியுடனான பழக்கம் தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலைகள்
நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும், கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.