Rock Fort Times
Online News

வரலாற்றுப் பிழைகள் மலிந்த நூல்களை கொள்முதல் செய்தது யார்?… ‘விசாரணை ஆணையம்’ அமைக்க கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!

கோவையில், கடந்த திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் உள்ள ஏராளமான நூல்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் விமர்சித்திருக்கிறார்.  இது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமான சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூலகத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த நூல்கள் இடம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மனம் நொந்து தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சான்றுக்கு சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.  போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது  என ஊகிக்கும் அதே வேளையில், வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிகமோசமான மன்னிக்க முடியாத பெருங்குற்றம் ஆகும்.  இதன்
பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளித்திட ‘விசாரணை ஆணையம் ‘ அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வீரபாண்டியன் :

சுயமரியாதைக்கான இயக்கத்தை உருவாக்கி, சுயமரியாதைக்கான அடித்தளம் சமத்துவம் என்றவர் பெரியார். அவர் பெயரில் உள்ள நூலகத்தில் முறைகேடுகள், ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெரியார் நூலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் ஊழல், முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் :

இந்த போலி நூல் கொள்முதல் ஊழலில் முழு உண்மை வெளிவர வேண்டும் எனில் இந்த ஊழல் குற்றச்சாட்டில் பெரும்பங்கு வகிக்கும் புத்தகங்கள் தவெக அரசு அமைந்தவுடன் பெறப்பட்டுள்ளதால், இந்த ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு விசாரிக்காமல் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையிலோ விசாரணை நடைபெறுவது தான் சரியான தீர்வாக அமையும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்