நூலக ஊழல் விவகாரம்: இரு பதிப்பகங்களுக்கு திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது உண்மை… * ஆதாரத்துடன் விளக்கமளித்த த.வெ.க..!
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக அகல் விளக்கு பதிப்பகத்துக்கும், ஃபீனிக்ஸ் பதிப்பகத்துக்கும் திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது தொடர்பான ஆவணத்தை தவெக வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தவெகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
‘இதோ அகல் விளக்குப் பதிப்பகத்துக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கெள்முதல் ஆணைக்கான கடிதம் அத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றொரு பதிவில்,
‘ஃபீனிக்ஸ் பதிப்பகம் என்பதே தங்களுக்கு தெரியாது என்பதுபோல திமுக முனகத் தொடங்கி உள்ளது. ஊழலில் ஊறித் திளைத்த இயக்கம் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான். இருந்தாலும் அவர்களை விடக் கூடாது என்பதால் ஆதாரங்களை வெளியிட்டே ஆக வேண்டி உள்ளது.
மேலும், ஃபீனிக்ஸ் பதிப்பகத்துக்கு வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை? பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட ‘சித்தரஞ்சன் சாலை மூர்த்தி’-க்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா?’ என அந்தப் பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, ‘பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?’ என்று திமுக கேள்வி எழுப்பியிருந்தது கவனிக்கத்தக்கது.

Comments are closed.