மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்தில் இன்று(நவம்பர் 6) திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உட்பட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபர் ரத்தினம் தமிழகத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வந்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, கனிம வள முறைகேடு விவகாரத்தில் சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் தொழிலதிபர் ரத்தினத்துக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் குவாரி முறைகேடு தொடர்பாகப் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Comments are closed.