Rock Fort Times
Online News

பார்க்கும் இடமெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் மயம்; ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் திருச்சி ஃபுட் ஸ்ட்ரீட்…!

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை ஆகியவை இணைந்து மாநிலத்திலேயே முதன் முறையாக திருச்சி, காஜாமலை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் ஃபுட் ஸ்ட்ரீட்டை கடந்தவாரம் ஆரம்பித்துள்ளது.ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான உணவு வீதி என்கிற விளம்பரத்தோடு ஆரம்பமான இங்கு மொத்தமுள்ள 39 கடைகளில் பெரும்பாலானவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஃப்ரோஸன் ஃபுட்ஸ், பிரியாணி, பானி பூரி, நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளே அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் ஆரோக்கிய விரும்பிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் நாம் பேசியபோது அவர்கள் தெரிவித்ததாவது.,”திருச்சியில் ஃபுட் ஸ்ட்ரீட் ஆரம்பிக்கப்படுவதாக தமிழக அரசு எப்போது அறிவித்ததோ, அப்போதிலிருந்தே இத்திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என ஆர்வத்தோடு காத்திருந்தோம். வீடு, ஆஃபீஸ், வேலை என வாரம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் எங்களுக்கும் உணவுப் பிரியர்களுக்கும் இது ரிலாக்ஸ் பாயிண்டாக இருக்கும் என நம்பினோம். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்திட்டத்தின் துவக்க விழாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியோடு இங்கு அமைக்கப்பட்டுள்ள உணவுக் கடைகளை பார்வையிட்டோம்.


தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உணவு வீதி ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவிருக்காது என எண்ணிய எங்களுக்கு, இங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளில் விற்பனை செய்யும் உணவு ரகங்கள் அதிர்ச்சியை தந்தது. ஏனென்றால் மொத்தமுள்ள 39 கடைகளில் பெரும்பாலானவற்றில் சிக்கன் பிரியாணி, ரைஸ், நூடுல்ஸ் போன்ற ஃபாஸ்ட் புட் ரகங்களும், குளிர்பதன உணவுகளுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கண்துடைப்பிற்கு ஒன்றிரண்டு கடைகளில் ஃப்ரெஷ் ஜூஸ், சிறுதானிய உணவுகள் இருந்தாலும் அவையாவும் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இப்பகுதிக்கு சென்றாலே பிரியாணி, ஃபாஸ்ட் ஃபுட் வாசனை சுண்டி இழுப்பதால், மக்கள் அனைவரும் அந்த குறிப்பிட்ட கடைகளில் குவிகின்றனர். தற்போது, தமிழக அரசின் சார்பில் உணவு வீதி ஆரம்பிக்கப்பட்டுள்ள திருச்சி, ரேஸ் கோர்ஸ் சாலை வாக்கிங் செல்பவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இடம். அண்ணா ஸ்டேடியத்தை சுற்றி மொத்தமுள்ள 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வாக்கிங் செல்ல வசதியாக பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்டு தனி நடைபாதையும் உருவாக்கப்பட்டது.

ஆரோக்கியத்தின் மேல் அக்கறை கொண்டு காலை, மாலையில் நூற்றுக்கணக்கானவர்கள் நடைபாதை செல்லும் இந்த இடத்தை ஆக்கிரமித்து தற்போது ஃபுட் ஸ்ட்ரீட் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது இப்பகுதியில் வாக்கிங் செல்ல யாரும் விரும்புவதில்லை. மேலும் இந்த உணவு வீதியில், செரிமானக் கோளாறு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கேன்சர் என உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தவறான உணவு கலாச்சாரத்தை தமிழக அரசே ஊக்குவிப்பது தவறான முடிவாகும். அருகிலிருக்கும் கே.கே.நகர், சுப்பிரமணியபுரம், ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவுப்பிரியர்கள் ஒரே நேரத்தில் இங்கு வந்து குவிகின்றனர். இப்படி கார் மற்றும் பைக்குகளில் வருபவர்களின் வாகனங்களை நிறுத்த முறையான பார்க்கிங் வசதியும் செய்யவில்லை. இதனால் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் ரேஸ் கோர்ஸ் ரோடே ஸ்தம்பித்து போய் உள்ளது. ஆகவே, இதே உணவு வீதியில் பாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கு பதில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சூப் வகைகள், முளைகட்டிய தானியங்கள், நவதானிய உணவுகள் போன்ற ஆரோக்கிய உணவுகளை ஆரம்பித்தால் இத்திட்டம் இன்னும் சிறப்படையும்
என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்